தமிழகத்தில் எந்த மூலையிலும் உரத் தட்டுப்பாடு இல்லை என்பதையும், இனியும் தட்டுப்பாடு நிலவாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் 55 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படும் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் மெட்ரிக் டன் முதல் 26 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான உரங்கள் தேவைப்படுகின்றன. இந்த உரங்களில் ரபி பருவத்திற்கு மட்டும் 5.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவும், 2.25 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி.யும், 2.6 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாசியம் தேவைப்படுகிறது. இதில் யூரியா மற்றும் பொட்டாசியம் உரங்கள் அனைத்து வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் கடைகளிலும் தாராளமாக கிடைத்து வருகிறது.
ஸ்பிக் நிறுவனம் ஆகஸ்டு மாதம் முதல் மீண்டும் டி.ஏ.பி. உர உற்பத்தியை துவங்கினாலும், குறைந்த அளவே உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது. டி.ஏ.பி. உரம் தயாரிப்பிற்கு தேவையான பாஸ்பாரிக் அமிலம் வெளிச்சந்தையின் விலை ஏற்றத்தால் இறக்குமதி அளவு குறைந்ததால், அனைத்து மாநிலங்களிலும் டி.ஏ.பி. உரத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த 3.12.2007 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற உர ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஐ.பி.எல் நிறுவனம் மூலம் 52,000 மெட்ரிக் டன்களும், இப்கோ நிறுவனம் மூலம் 7,300 மெட்ரிக் டன்களும், ஸ்பிக் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன்களும், மங்களூர் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலம் 6,200 மெட்ரிக் டன்களும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியுள்ளது.
1.12.2007 முதல் 3.12.2007 வரை 6,800 மெட்ரிக் டன்கள் டி.ஏ.பி. உரம் இப்கோ மற்றும் இந்தியன் பொட் டாஷ் நிறுவனம் மூலம் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 14.12.2007 அன்று 22,000 மெட்ரிக் டன் அளவு கொண்ட டி.ஏ.பி. கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர உள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டி.ஏ.பி. உரம் டான்பெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலமே விவசாயி களுக்கு விற்பனை செய்யப் படுவதால், தனியார் உரக் கடைகளில் விற்பனை செய்ய முடியவில்லை. பாதிக்கப்பட்ட தனியார் உரக்கடை அதிபர்கள் டி.ஏ.பி. உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைப் போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்க பேட்டி கொடுப்பதுடன், அறிக்கையும் வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் எந்த மூலையிலும் உரத் தட்டுப்பாடு இல்லை என்பதையும், இனியும் தட்டுப்பாடு நிலவாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.