''என்னை பொருத்தவரை ராமதாஸ் கூறும் குற்றச்சாட்டுகளை ஆக்கப்பூர்வமான விமர்சனமாகவே எடுத்துக் கொள்கிறேன்'' என்று முதலைமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளாரே? என்ற கேள்விக்கு கருணாநிதி பதில் அளிக்கையில், இதற்கு முன்பு இருந்த தமிழக அரசின் சார்பில் யாரையும் வேலைக்கு எடுக்கக்கூடாது என்று தடை ஆணை பிறப்பித்திருந்தார்கள்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த ஆணையை ரத்து செய்து ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக இந்த ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 149 பேர் அரசு பணியில் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இது வரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 பேருக்கு 77 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப் பட்டிருக்கிறது.
மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தீர்ப்பதற்கு சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒவ்வொரு நாளும் அவரது அறிக்கையை படித்து அந்தந்த துறை அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் பேசி முடிந்த வரை தவறுகளை களைவதற்கு அந்த அறிக்கை பயன்படுகிறது என்பது மட்டும் நிச்சயம். என்னை பொருத்தவரை ராமதாஸ் கூறும் குற்றச்சாட்டுகளை ஆக்கப்பூர்வமான விமர்சனமாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று முதலைமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.