மருத்துவக் கல்வியில் மாணவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து அரசின் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் கலந்து பேசினால் மாணவர்களின் எதிர்காலமும், மக்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாத ஒரு நல்ல முடிவு ஏற்படுவதற்கு வழி வகை காண முடியுமென்று நம்புகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசின் வேண்டுகோளை மீறிப் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பில் விடப்பட்ட அறிக்கையில் மாணவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை. சில ஏடுகள் அரசின் அறிக்கையை அப்படியே வெளியிட்ட போதிலும், தலைப்பு போடும் போது "எச்சரிக்கை”, "கெடு” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தன. அதைப் பார்த்த மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுகள் ஏற்படுவது இயற்கைதான்.
அதே நேரத்தில், மாணவர்கள் தங்கள் படிப்பைக் கெடுத்துக் கொண்டு இன்னும் நடைமுறைக்கே வராத ஒன்றுக்காக போராடி நேரத்தை வீணாகச் செலவழிக்கிறார்களோ என்று தான் நான் கவலைப்படுகிறேன். இதற்கான குழுவின் அறிக்கை வந்த பிறகு நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் தான் முடிவு எடுக்கப்பட உள்ளது.
எனவே இந்த நிலையில் வேறு எந்த மாநில மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடாத போது, தமிழகத்திலே உள்ள மாணவர்கள் எல்லாம், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அவர்களுடைய பெற்றோர் எந்த அளவிற்கு சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து விட்டு, போராட்டத்தினை தொடர வேண்டுமா என்றுதான் சிந்திக்க வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி, இந்த பிரச்சனையில் ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைந்திருப்பதாக சொல்லிவிட்டு, அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக அவர் பேசி வருவது ஒருவேளை மாணவர்களின் மனக் குழப்பத்திற்குக் காரணமாக ஆயிருக்குமோ என்று நான் கருதினாலும் கூட, குழுவின் அறிக்கை வந்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும் என்று இறுதியாக அன்புமணி உறுதி அளித்திருப்பதை ஏற்றுக் கொண்டு, மாணவர்கள் தமது போராட்டத்தை நிறுத்தி வைப்பது தான் வரவேற்கத்தக்கதாகவும், பாராட்டத்தக்கதாகவும் அமையும் என்று கூறிக் கொள்கிறேன்.
கிராமங்களில் சென்று பணியாற்றுவதற்கு தயார் என்றும், ஆனால் மருத்துவ மாணவர்களாக அல்ல என்றும் மருத்துவர்களாகவே சென்று பணியாற்றத் தயார் என்றும் மாணவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் சார்பில் அவர்கள் மாணவர்களாகவே ஓராண்டு காலம் கிராமங்களில் மேலும் பணியாற்றி விட்டு, அதற்குப் பிறகு தான் மருத்துவர்களாக ஆக வேண்டுமென்று கூறுகிறது. இந்த இரண்டு கருத்துக்களையும் ஆராயும் போது இடையே ஒரு மெல்லிய இழைதான் வித்தியாசமாக இருக்கிறது. இருசாராரும் அமர்ந்து கலந்து பேசினால் அந்த வேறுபாட்டினைப் போக்கிக் கொள்ள முடியும்.
மருத்துவக் கல்வியில் மாணவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை குறித்து உண்மை நிலையை அலசி ஆராய்ந்து, ஒரு முடிவெடுக்க சுமூகமான முறையில் அரசின் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் கலந்து பேசினால் மாணவர்களின் எதிர்காலமும், மக்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாத ஒரு நல்ல முடிவு ஏற்படுவதற்கு வழி வகை காண முடியுமென்று நம்புகிறேன். இந்த என் கருத்தையேற்று மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.