தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டையை சேர்ந்த சகோதரிகள் லோகேசுவரி, அம்பிகா, ஷர்மிளா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் முஸ்லிம் மதத்துக்கு மாறினர். இதை எதிர்த்து அய்யம் பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. 4 பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றத்திலும் பாதுகாப்பு கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராம், 4 பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அந்த பெண்களின் பெற்றோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் செல்ல நான்கு பெண்களும் மறுத்துவிட்டனர். சென்னையிலேயே தங்கியிருந்து படிக்க போவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து நீதிபதி, நான்கு பெண்களும் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்களா? அல்லது தானாக முன்வந்து மதம் மாறினார்களா? என்று அறிக்கை தாக்கல் செய்யும் படி அய்யம்பேட்டை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இன்று அய்யம் பேட்டை காவல் ஆய்வாளர் தேவன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் "4 பெண்களையும் யாரும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. அவர்களாகவே முன்வந்து மதம் மாறியிருக்கிறார்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.