இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசு நெல் விலை நிர்ணயத்தில் செய்துள்ள பாரபட்சத்தையும் அநீதியையும் போக்கி மத்திய அரசு தற்போதைய உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப ஒரு குவிண்டால் நெல் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.1,500 என உயர்த்த வேண்டும். உடனடியாக இடைகால ஏற்பாடாக கோதுமைக்கு சமமாக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000 என அறிவிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வரும் இன்று (29ஆம் தேதி) இந்திய தலைநகர் டில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நெல் கொட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டில்லியில் நாடாளுமன்றம் முன்பும் நெல்கொட்டும் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் வேட்டவலம் மணிகண்டன், நிர்வாகிகள் வையாபுரி, குருசாமி, சேரன், கல்யாணம், சுந்தரவிமலநாதன், சத்திய நாராயணா, நல்லசாமி, அய்யாக்கண்ணு, வெங்கட கிருஷ்ணன், சம்பத், சுந்தரராஜன் உள்பட அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.