தலைமை ஆசிரியர் அடித்ததால், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட மாணவன் இறந்தான்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை உருமாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது இளைய மகன் குமரேசன் (17) பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 24ம் தேதி பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு குமரேசன் செல்லவில்லை. 26ம் தேதி குமரேசன் பள்ளிக்கு சென்றான். குமரேசனை தலைமை ஆசிரியர் முருகேசன் அடித்துள்ளார். மதியம் வரை வெயிலில் முட்டி போட வைத்துள்ளார். மீண்டும் 27ம் தேதி பள்ளிக்குச் சென்ற குமரேசனை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.
மாலை குமரேசன் வீட்டுக்கு வந்தான். அம்மா, அண்ணன் இருவரும் வேலைக்கு சென்றிருந்தனர். கதவை தாழிட்டான். வீட்டிலிருந்த பத்து லிட்டர் மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டான். தீ கொழுந்து விட்டு, எரிந்தது. எரிச்சல் தாங்க முடியாத குமரேசன் அலறிக் கொண்டே கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தான். குமரேசன் உடலில் எரிந்த தீயை அக்கம்பக்கத்தினர் அணைத்தனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். வெகு நேரம் வலியால் துடித்துக் கொண்டிருந்த குமரேசன், நேற்று இறந்தான். ஆத்திரமடைந்த உறவினர்கள் தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நேற்று காலை குமரேசனின் உடலை வாங்க மறுத்தனர். பின் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். பின் குமரேசன் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.