பெண்கள் தற்காப்புக்காக சிறு வயதிலேயே கராத்தே, ஜுடோ போன்ற கலைகளை கற்கவேண்டும். இதனால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கூறினார்.
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் குடியரசுத் தலைவர்தி பிரதீபா பட்டீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சிறந்தபெண்மணியாக திகழும் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் வழங்கினார். அதை பிரதீபா பட்டீல் பெற்றுக்கொண்டார். இது அவர் பெற்ற முதல் கவுரவ டாக்டர் பட்டம் ஆகும்.
விழாவில் பேசிய பிரதீபா பாட்டீல், பொதுவாழ்க்கையில் பெண்கள் ஈடுபடவேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆண்களைவிட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றோ, குறைந்தவர்கள் என்றோ எண்ணுவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள்.
பெண்கள் இப்போது இமயமலைக்கும் செல்கிறார்கள், ராணுவத்திலும், காவல்துறையிலும், கமாண்டோ படையிலும் இடம் பெற்றுள்ளனர், விண்வெளிக்கும் சென்று வருகிறார்கள். அவர்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, என்ஜினீயரிங், மருத்துவம், ஆசிரியை பணி ஆகியவற்றிலும், சிறந்த நிர்வாகிகளாகவும், சிறிய தொழில்கள் செய்யும் பெண்களாகவும் விளங்குகிறார்கள். அதேநேரத்தில் பெண்கள் பல்வேறு சவால்களையும் பாலின பாகுபாடு போன்ற சமூக அநீதிகளையும் அன்றாடம் எதிர்கொள்ளவேண்டிய அவல நிலை உள்ளது என்பதும் அசைக்க முடியாத உண்மை.
பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களும், குடும்ப பிரச்சினைகளும் அதிக அளவில் இருப்பது வருந்தத்தக்கது.
கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
பெண் குழந்தைகள் பிறந்தால் அதை பரிசாக கருத வேண்டும். அத்தகைய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்க பெண்களைவிட ஆண்களுக்கும் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மகளைவிட மகனை படிக்க வைக்கும் நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும். பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்கவேண்டும்.
சிறுமிகள் சிறுவயதிலேயே தற்காப்புக்காக கராத்தே, ஜுடோ ஆகிய கலைகளை கற்கவேண்டும். அதனால் உடல் வலுப்பெற்று தன்னம்பிக்கை ஏற்படும் என்று பிரதீபா பட்டீல் கூறினார்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பிற்பகல் 1.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.