காஞ்சிபுரம் கிரஷர் ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!
Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (12:54 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிரஷர் இயக்கத்தை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பொன்தண்டலம்- பழந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் மிகப் பெரிய கிரஷர் நிறுவனத்தால் தங்களின் வேளாண் நிலங்கள் முழுவதும் கல் துகள்கள், கற்களால் சேதமடைந்துள்ளதாக மனுதாரர்கள் எஸ்.முனுசாமி, கே,அம்பிகா, பி,வேணுகோபால் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, தற்காலிகமாக அந்த கிரஷ்ர் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கைதாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையராக நாகஷீலாவை நியமனம் செய்துள்ளது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை கிரஷர் இயங்க தடை விதித்த நீதிபதிகள், அந்த நிறுவனம் அனுமதி பெற்றது தொடர்பாக நீதிமன்றத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கு தாக்கீது அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.