பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு பா.ம.க. வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு அடுத்த சட்டசபை தேர்தல் வரை நீடிக்கும் என்றார். இதேபோல மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் எங்கள் கட்சி உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க பாமக விரும்புவதால், அடுத்த மக்களவை தேர்தலிலும் இதே கூட்டணியில் பா.ம.க நீடிக்கும் என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன்பிறகு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் பா.ம.க தனியாக ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடும். இந்த கூட்டணியில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத கட்சிகள் இடம்பெறும் என ராமதாஸ் உறுதியுடன் கூறியுள்ளார்.
தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் பா.ம.க மாறி மாறி கூட்டணி வைப்பதாக கூறுகிறார்கள். 1967ல் சட்டசபை தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட பல கட்சிகள் கூட்டணியை மாற்றி மாற்றித்தான் தேர்தலை சந்தித்திருக்கின்றன. இதில் பா.ம.க.வை மட்டும் குறை கூறுவதில் அர்த்தமில்லை என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை அமைக்க உபயோகப்படுத்தாத நிலங்களை பயன்படுத்தலாம். விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது அந்த பகுதியில் பாதிக்கப்படுபவர்களுக்கு வேலை, அதிக இழப்பீடு போன்றவை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட பாதையில்தான் அதனை அமைக்க வேண்டும் என்று நாங்கள் நிர்பந்தம் செய்ய விரும்பவில்லை. மக்களின் மத உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் மிக பின்தங்கிய மாவட்டங்களில்தான் மது விற்பனையில் மிக அதிக வருமானம் கிடைக்கிறது என்பது ஒரு வேதனையான விஷயமாகும். அதிக வருமானத்தை காரணம் காட்டி மதுவிலக்கை அமல் படுத்துவதில் தயக்கம் காட்டுவது வருந்தத்தக்கதாகும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.