சட்டபேரபவையில் சீனியார்டி அடிப்படையில் இருக்கை ஒதுக்காததால் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
புதுச்சேரி மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று நடந்தது. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அங்காளன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கந்தசாமி மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின்பு சட்டசபை கூட்டத்தொடருக்கு முதல் முறையாக வருகை தந்தார். அவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது முதலமைச்சர் இருக்கைக்கு அருகே அமைச்சர்கள் வைதியலிங்கம், வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி ஆகியோருக்கு பக்கத்தில் கந்தசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
மவுன அஞ்சலி நடைபெறும் வரை அந்த இருக்கையின் அருகே நின்று கொண்டிருந்த அமைச்சர் கந்தசாமி, அஞ்சலி முடிந்தவுடன் அவசரம் அவசரமாக அவையை விட்டு வெளியேறினார்.
இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், சீனியாரிட்டி அடிப்படையில் வைதியலிங்கம் இருக்கைக்கு அருகில் எனக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இதுகுறித்து சபாநாயகர் ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தேன் என்றார்.
அவையில் நான் கேட்டபடி இருக்கை எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்போடு அவைக்கு வந்தேன். ஆனால் அதற்கு மாறாக வருத்தம் அளிக்கும் வகையில் சம்பவங்கள் நடைபெற்றன என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இந்த அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. அதனை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற்ற சம்பவம் உள்ளது என சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.