வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வாடகை குடியிருப்புகள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்து இருந்தால் அதனை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகளை 22ஆம் தேதி ஆய்வு செய்தார். வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் நிலைகள் பற்றி கேட்டறிந்தார். வாரியத்தின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், எந்த விதத்திலும் அந்த திட்டங்கள் ஏழை மக்களை பாதித்து விடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் வாரியம் வசம் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வாடகை குடியிருப்புகளை அந்தந்த வாரிய செயற்பொறியாளர்கள் பார்வையிட்டு, அவற்றில் பழுதடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனை புதிதாக கட்டுவதற்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதியளித்தார்.
கடந்த சட்டமன்ற தொடரில் கூட்டு முயற்சி திட்டத்தின் கீழ் வாரிய வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்துவதற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதால், இந்த திட்டத்தின்கீழ் தமிழகமெங்கும் வாரியத்தின் வசம் உள்ள நிலங்களில் வீடுகள் கட்டும் திட்டத்தினை உடனடியாக தொடங்குமாறு உத்தரவிட்டார்.
வாரியத்தால் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தையும் நவீன யுக்திகளை கையாண்டு தரமுள்ளவைகளாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.
வாரியத்தில் விற்கப்படாமல் தேங்கியுள்ள வீடுகள், குடியிருப்புகள் மற்றும் மனைகளை விற்பதற்கு மேலாண்மை இயக்குனர், செயலாளர், நிதி ஆலோசகர், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து பேசி அந்தந்த இடங்களுக்கு தக்கவாறு புதிய யுக்திகளை கையாண்டு விரைவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வழங்கப்படாமல் உள்ள அனைத்து விற்பனை பத்திரங்களும் உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறினார்.