தி.மு.க. வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி ஜெயலலிதாவுக்கு ஒரு தாக்கீது அனுப்பி உள்ளார். அதில், என்னுடைய கட்சிக்காரர்களாகிய முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ள விஷயம் தொடர்பாக இந்த தாக்கீதை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த நீங்கள் எங்களது கட்சிக்காரர்கள் இருவர் மீதும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறீர்கள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதாக சில வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என வழக்கறிஞர் பாரதி தெரிவித்துள்ளார்.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைக்கு மாறான தகவலாகும். உங்கள் வீட்டுக்குள் நுழைந்தவர் உங்கள் கட்சியான அ.தி. மு.க. அனுதாபி என்று நம்பப்படுகிறது. அவருக்கும் எனது கட்சிகாரர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் அவர்கள் மக்களுக்கு தொண்டாற்றுவதை திசை திருப்பும் வகையில் இப்படி புகார் கூறி இருக்கிறீர்கள் என்று பாரதி கூறியுள்ளார்.
நீங்கள் கூறிய புகாருக்காக இந்த தாக்கீதை பார்த்த 48 மணி நேரத்துக்குள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது சிவில், கிரிமினல் சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி குறிப்பிட்டுள்ளார்.