"விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருப்பதால் சட்டமன்ற கூட்டத்தொடரை 10 நாட்களாவது நீடிக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
6 மாதத்திற்கு பிறகு கூடுகின்ற சட்டமன்ற கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்படுவது போல் உள்ளது. எத்தனையோ பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சமச்சீர் கல்வி, விவசாயிகளின் பிரச்சினை, சிமெண்ட் விலை உயர்வு, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் இங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்களும் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும். இதற்காக குறைந்தது 10 நாட்களாவது கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
கூட்டுறவு தேர்தலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.