தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 2 ஆயிரம் ரகங்களில் புதிய பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்கிறது என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.பி.சாமி கூறினார்.
மதுரையில் புதிய கோ ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தையும், வடிவமைப்பு மையத்தையும் திறந்து வைத்து அமைச்சர் பேசுகையில், சட்டைகள், புடவைகள் உட்பட 5 ஆயிரம் புதிய வகை கைத்தறி ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கைத்தறி மற்றும் பட்டுப்புடவை ரகங்களில் தற்போது 30 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்றார்.
வானவில் வண்ணங்களில் கோ ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்திய நவரத்னா புடவைகள் மற்றும் தூய பட்டினால் செய்யப்பட்ட அழகு மயில் சேலைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக அமைச்சர் சாமி கூறினார்.
இதே போல், மல்லிகை, ஸ்ட்ராபெரி மற்றும் ரோஜா நறுமணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு கிட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மனுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புடவையை கோயில் நிர்வாகிகளிடம் அமைச்சர் ராஜா வழங்கினார்.