''ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு மாணவிக்கு ஏற்பட்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு டீன் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது'' என சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவ கல்லூரிகள், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 3 மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றையும் அதை சார்ந்த மருத்துவமனைகளையும், மாணவ விடுதிகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்காக அரசு ரூ.33 கோடி ஒதுக்கியுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை ரூ.100 கோடி செலவில் புதிய கட்டடங்களுடன் நவீனமாகிறது. இங்கு மாணவர் விடுதிக்காக மட்டும் ரூ.18 கோடி செலவிடப்படுகிறது. இதுபோல மிகவும் பழமையான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 கோடியும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ரூ.25 கோடியும் செலவிடப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு மாணவிக்கு ஏற்பட்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு டீன் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அவர்கள் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாண வர்கள் யாருக்கும் மர்ம காய்ச்சல் இல்லை. சாதாரண காய்ச்சல் தான். அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இருக்க பொது மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.