முழு அடை‌ப்பு : கருணா‌‌நி‌தி கடமை தவ‌றி ‌வி‌ட்டா‌ர்: ஜெயலலிதா!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (15:33 IST)
“உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌‌‌தீ‌ர்‌ப்பு‌க்கு ‌பிறகு முழு அடை‌ப்பு நடைபெறாது என்று அறிவிக்காமல் முதல்வர் செய்ய வேண்டிய கடமையை செய்ய கருணாநிதி தவறிவிட்டார்'' எ‌ன்று ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த 1.10.2007 அன்று தமிழகத்தில் நடந்த முழு அடை‌ப்‌பி‌ற்கு உச்ச நீதிமன்றம் 30.9.2007 அன்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. தடை உத்தரவையும் மீறி 1.10.2007 அன்று பந்த்நடைபெற்றது. தி.மு.க. அரசின் முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் தூண்டுதலுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆட்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை எ‌‌‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் முழு அடை‌ப்பு நடத்த தடை விதித்திருப்பதால் 1.10.07 அன்று உண்ணாவிரதம் நடக்கும் என்று பேட்டி அளித்த கருணாநிதி 1.10.07 அன்று அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் ஓடும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என்றும் அதோடு சேர்த்து அறிவித்திருக்க வேண்டும். கருணாநிதிக்கு அவ்வாறு அறிவிக்க மனம் வராவிட்டாலும் தமிழக அரசின் தலைமை செயலாளரை அழைத்து தமிழக அரசின் சார்பில் ஒர் அறிக்கை வெளியிடச் செய்திருக்க வேண்டும். தலைமை செயலாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும் என ஜெயல‌லிதா ‌கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

ஆனால், கருணாநிதி இதை வேண்டுமென்றே தவிர்த்தார். முழு அடை‌ப்பு நடைபெறாது என்று அறிவிக்காமல் முதல்வர் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டார். தலைமைச் செயலாளரையும் அறிக்கை வெளியிட விடாமல், அவரையும் தனது கடமையை செய்ய விடாமல் தடுத்து விட்டார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி இருக்கிறார் எ‌ன்று ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றி இரு‌க்‌கிறா‌ர்.

தலைமைச் செயலகமும், பல்வேறு அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன என்றும், 26 உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும், பஸ்கள் இயங்கவில்லை என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் 3 முதல் 4 மடங்கு வரை ஆட்டோ கட்டணம் செலுத்த நேரிட்டது என்றும், தமிழகமே ஸ்தம்பித்து விட்டது என்றும் அனைத்து நாளிதழ்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன என ஜெயல‌‌லிதா சு‌‌‌ட்டி‌க் கா‌ட்டியு‌ள்ளா‌ர்.

முதல்வரும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் முழு அடை‌ப்பு‌க்கு துணை போக வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரியவருகிறது எ‌ன்று அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்