பருவ காலம் தொடங்குவதால் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் 2 மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 1400 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது 1000 கனஅடி தண்ணீர் தான் அங்கிருந்து திறந்து விடப்படுகிறது.
அடுத்த வாரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் ஏரிகளுக்கு மழைநீர் வர ஆரம்பித்துவிடும் என்பதால் கிருஷ்ணாநீர் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 3,667 மில்லியன் கனஅடி அளவுக்கு கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. வரும் மே மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இங்குள்ள ஏரிகளில் நீர்மட்டம் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.