மேயரை ‌நீ‌க்க 80 ‌விழு‌க்காடு கவுன்சிலர்கள் ஆதரவு தேவை: அரசு அவசர சட்டம்!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (10:07 IST)
எ‌‌ண்பது ‌விழு‌க்காடு கவு‌ன்‌சில‌ர்க‌ள் ஆதரவு இருந்தால்தான் மாநகராட்சி மேயர் அல்லது துணைமேயர், நகராட்சி தலைவர் அல்லது துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளின் தலைவர்கள் ம‌ற்றும் துணைத் தலைவர்களுக்கு எதிராக ஏராளமான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் வந்துள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தவறாக நிர்வாகம் செய்தால் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்ற சட்டம் பற்றி விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாலோ, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளு‌க்கு இடையே பொறுத்துக் கொள்ளும் தன்மை அதிகரிப்பதன் காரணமாகவும், அரசியல் காரணங்கள் மற்றும் தனிப்ப‌ட்ட காரணங்களுக்காகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நேர்மையற்ற முறையில் இதுபோன்ற தீர்மானங்களை கொண்டு வரும் நிலை உள்ளது.

இந்தப்போக்கு, பொதுமக்களின் நலனுக்காக அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொ‌ள்வது போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் நோக்கத்தில் இருந்து கவுன்சில் நிர்வாகம் திசைமாறிச் செல்ல காரணமாகி விடுகிறது.

இதன் விளைவாக பேரூராட்சி மற்றும் நகராட்சிகளின் சுமுகமான சூழல் மாறி, மன்றக் கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலையும் உருவாகி விடுகிறது. இதையடுத்து அதன் நிர்வாகமும் பாதிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது ஜனநாயக உரிமையாக இருக்கின்ற போதிலும், அதனை அடிக்கடி கொண்டு வந்தாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ அது ஜனநாயகத்தையே பாதித்துவிடும்.

இதனால், இந்த விரும்பத்தகாத போக்கை தடுக்கவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவும் அரசு முடிவு செய்தது. அதன்படி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த சட்டம் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) அவசர சட்டம் 2007 என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இது, உடனடியாக அமலுக்கு வருவதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் சட்டப்படி செல்லாததாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தம் விவரம்:

இந்த சட்டத்தின் துணைபிரிவு 2-ன்படி அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களில் 50 ‌விழு‌க்கா‌ட்டிற்கும் குறையாத உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றிருந்தது. இனிமேல் 60 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌‌ம் குறையாத உறுப்பினர்கள் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்று திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல துணைபிரிவு 12-ன் படி 60 ‌விழு‌க்கா‌ட்டிற்கும் குறையாத கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றிருந்தது. இனிமேல் 80 ‌விழு‌க்கா‌ட்டிற்கும் குறையாத கவுன்சிலர்கள்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றிருந்த சட்டம், ஒரு ஆண்டுக்கு ஒருமுறைதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல மாநகராட்சி மேயர் அல்லது துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் அல்லது துணைத் தலைவர்கள் பதவியேற்ற ஓராண்டுக்குள்ளும், பதவிக் காலத்தின் கடைசி வருடத்திலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்