சிவாஜிக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்த முதல்வர் கருணாநிதி, அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
காந்தி ஜெயந்தி மற்றும் நடிகர் சிவாஜி பிறந்த நாளை யொட்டி சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடந்தது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தியை தயாரித்த ஏ.வி.எம். நிறுவனத்தின் ஏ.வி.எம்.சரவணன், நடிகை ஜெயசித்ரா, கிரேசிமோகன், முன்னாள் நீதிபதி பூதநாதன், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் மீனாட்சி சுந்தரம், கட்டட தொழிற்சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம், ஜெயந்தி ஆகியோருக்கு `செவாலியே சிவாஜி' விருதை மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், அரசியலில் நான் உயர்ந்த இடத்துக்கு வர காரணமாக இருந்தவர் சிவாஜி. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வர அவர் அடையாளம் காட்டியவர்களில் நானும் ஒருவன். காமராஜர் ஆட்சி அமையும் வரை ஓயமாட்டேன். காங்கிரசாரின் கனவு நிறைவேறும். விரைவில் காமராஜர் ஆட்சி அமையும் காலம் வரும் என்றார்.
கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் கருணாநிதி. அடுத்து மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள் என்று அமைச்சர் இளங்கோவன் கூறினார்.