சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தடுமாறினால், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவிகளைத் துறக்கவும் தயாராக வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
சேது கால்வாய்த் திட்டத்தை எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, முதல்வர் கருணாநிதியும், அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நடத்திய உண்ணாவிரதம் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்து தேவையற்றது. அதுமட்டுமின்றி, இது ஜனநாயக வழிமுறைகளில் குறுக்கிடுவதும் ஆகும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை போன்ற முக்கிய பிரச்னைகளில் உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளை மதிப்பதற்கு முறையே கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அரசுகள் தவறின. அந்த அரசுகள் மீது இதுவரை சிறு கண்டனமும் தெரிவிக்காத உச்ச நீதிமன்றம், இப்பிரச்னையில் மட்டும் தலையிட்டு, கண்டிப்பதற்குக் காரணம் என்ன? இது புரியாத புதிராக உள்ளது என்று பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேது கால்வாய்த் திட்டத்தை முடக்க யார் முயற்சி செய்தாலும், அதைத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று, முறியடிக்க வேண்டும். இப்பிரச்னையில் மத்திய அரசு ஊசலாட்டத்துடன் தடுமாறுமானால், அந்த அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவிகளைத் துறந்து வெளியேறுவதற்கும் தயாராக வேண்டும் கூறியுள்ளார் நெடுமாறன்.