தமிழ்நாட்டில் 150 அரசு சித்த மருத்துவ டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி விடுதிகள் அனைத்தையும் சீரமைத்திட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விடுதிகள் சீரமைக்கப்படும். காலியாக இருந்த அனைத்து அரசு டாக்டர் பதவிகளும் நிரப்பப்பட்டு உள்ளன. மருத்துவர் அல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எய்ம்ஸ்) மதுரையில் தொடங்கவும் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ டாக்டர்கள் 150 பேர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தடை செய்யப்பட்ட மருந்துகளை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணியிடங்கள் நீங்கலாக 13 ஆயிரம் காலியிடங்கள் இருந்தன. அதில் பாதியளவுக்கு நிரப்பப்பட்டு வருகிறது. மீதம் உள்ள காலி பணி இடங்களுக்கு தமிழ்நாடு தேர்வாணையம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசு மூலம் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசிகளை முறையாக உரியவர்கள் போடவேண்டும். இல்லாவிட்டால் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.