முழு அடைப்பு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையையும் மீறி முழு அடைப்பு நடத்தப்பட்டால் அதற்காக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது!
உச்ச நீதிமன்றம் விதித்த தடையையும் மீறி தமிழகத்தில் முழு அடைப்பு நடந்து வருவதாக கூறி அஇஅதிமுக சார்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “தடையை மீறி முழு அடைப்பு நடத்தப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்” என்று எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் நேற்று விதித்த தடையை மீறி தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முழு அடைப்பை நடத்தி வருகிறது என்று அ.இ.அ.தி.மு.க. சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் கூறினார். மாநில அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. ஆடடோ ரிக்சாக்களும் ஓடவில்லை. கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களும், தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உறுதியானால், அங்கு அரசமைப்பு ரீதியிலான நிர்வாகம் இயங்கவில்லை என்று பொருள். எனவே, அரசமைப்பு எந்திரம் முடங்கிவிட்ட ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயங்கக்கூடாது என்று கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில தொழிற்சங்கங்களின் முடிவினால்தான் தமிழ்நாட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
"தொழிற்சங்கங்களை குறை கூறாதீர்கள். அவர்கள் உங்களது (தமிழக அரசின்) உத்தரவுகளைத்தான் செயல்படுத்துகிறார்கள்" என்று நீதிபதிகள் கூறினர். அப்பொழுது குறுக்கிட்ட அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர், முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்று கூறினார். அவர் உண்ணாவிரதமம் இருக்கட்டும், எங்களுக்குக் கவலையில்லை என்ற நீதிபதிகள் கூறினர்.
"இந்த நாட்டில் ஒரு பிரச்சனை உள்ளது. எல்லாவற்றையும் இரும்புக்கரம் கொண்டுதான் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இல்லையென்றால் அவைகள் இயங்குவதில்லை. சட்டமன்றங்களாகட்டும், நிர்வாகமாகட்டும், நீதித்துறை ஆகட்டும் அரசின் ஒவ்வொரு அங்கத்தையும் இரும்புக்கரம் கொண்டே இயக்க வேண்டியுள்ளது" என்று நீதிபதிகள் கூறினர்.