சேது சமுத்திரத் திட்டத்தை வேகமாக நிறைவேற்றக் கோரி தி.மு.க. கூட்டணி சார்பில் அக்டோபர் 1 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள முழு அடைப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கின் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது!
சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் ஆளும் கட்சியே முழு அடைப்பு நடத்துவது உச்ச நீதிமன்றத் தீர்பபிற்கு எதிரானது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இன்றும் விசாரித்தது.
அக்டோபர் 1 ஆம் தேதி நடத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு தமிழக அரசு நடத்துவது அல்ல என்றும், அதனை தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் நடத்துகிறது என்று தமிழக அரசு வழக்கறிஞர் விடுதலை எடுத்துரைத்தார்.
முழு அடைப்பு நடத்தப்படும் அந்நாளில் வன்முறைகள் ஏதும் நடவாமல் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.
அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, முழு அடைப்பு அன்று வன்முறைகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாய்மொழியாகக் கூறினால் போதாது என்றும், அதை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
முழு அடைப்பு அன்று எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை எழுத்துபூர்வமாக நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்ற அமர்வு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
நாளை விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.