அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறிக்கை கலவரத்தை தூண்ட காரணமாக இருந்தது. இதனால் அவர் மீது வழக்கு தொடருவோம் என்று மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
இன்று காலையில் காவல்துறை இணை ஆணையர் துரைராஜ் கட்சி அலுவலகத்துக்கு வந்து நீங்கள் யாரும் ரோட்டிற்கு வரவேண்டாம். தி.மு.க. தொண்டர்கள் யாரையும் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். காவல்துறையின் உத்தரவாதத்தை ஏற்று நாங்கள் அலுவலகத்துக் குள்ளேயே இருந்தோம் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினரின் அனுமதியோடு தி.மு.க.வினர் அலுவலகத்தில் புகுந்து கற்கள், உருட்டுக் கட்டைகளால் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தினார்கள். எங்கள் தொண்டர்கள் காயம் அடைந்து உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்து முன்னணி அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டி மதக் கலவரத்தை உருவாக்குகிறார்கள் என்று குமாரவேலு குற்றம்சாற்றியுள்ளார்.
மைனாரிட்டி ஓட்டு வங்கியை தக்க வைப்பதற்காக போராட்டங்களை தூண்டி வருகிறார்கள். அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறிக்கை கலவரத்தை தூண்ட காரணமாக இருந்தது. இதனால் அவர் மீது வழக்கு தொடருவோம். எங்கள் கட்சியின் மையக் குழு நாளை அவசரமாக கூடுகிறது. அப்போது இது பற்றி முடிவு செய்யப்படும். நடந்த சம்பவங்கள் பற்றி கவர்னரிடமும் மனு கொடுப்போம் என்று பொதுச் செயலாளர் குமாரவேலு தெரிவித்துள்ளார்.