இந்திய வரைபடத்தில் ராமர்பாலம் இல்லை: டி.ஆர்.பாலு!
Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (16:02 IST)
இந்திய வரைபடத்தில் ராமர் பாலம் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆதம்பாலம் என்றுதான் உள்ளது என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் முந்தய பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இறுதி செய்யப்பட்டவை என்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அத்திட்டத்தை அமல்படுத்தும் வேலையைத்தான் செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதுவும் மத்திய அரசிற்கு இல்லை, எதிர்க்கட்சிகள்தான் இந்த விசயத்தில் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றன . இந்த அரசில் யாரும் மத நம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் அல்ல. மதச்சின்னங்கள் எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கப்படும். இந்து, சீக்கியர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் அல்லது எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அம்மக்களின் மதநம்பிக்கைகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை நிச்சயமாக நாங்கள் வழங்குவோம். பிரதமர் மன்மோகன் சிங்கோ, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித்தலைவர் சோனியா காந்தியோ அல்லது மத்திய அரசோ எந்த மதத்தையும் புண்படுத்த நினைத்ததில்லை. நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். எதிர்ப்பாளர்கள் அதைத் தடுக்க நினைக்கிறார்கள் என்றார்.
தனது அமைச்சகத்தைப் பொறுத்தவரை சேது சமுத்திரக் கால்வாய்ப் பிரச்சனை முடிந்து போன விசயம் என்றும் அவர் குறிப்பிட்டார். உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய வாக்குமூலம் பற்றிக் கேட்டதற்கு, "ஒன்று அல்லது இரண்டு வரிகளில் சில மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது என்று குற்றம்சாற்றப்பட்டது. இந்த விசயம் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் கவனத்திற்கு வந்தவுடன், வாக்குமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறும்படி கூறிவிட்டனர்" என்றார்.
சர்ச்சைக்குரிய வாக்குமூலத்திற்குப் பின்னால் யார் உள்ளனர் என்று கேட்டதற்கு, தனது அமைச்சகத்தின் பார்வையில் இல்லாத தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் அது தாக்கல் செய்யப்பட்டது என்று பாலு தெரிவித்தார்.
"அந்த வாக்கு மூலத்தில் சில மனிதத் தவறுகள் இருந்தன. அதை உடனயாகத் திரும்பப் பெற்றதன் மூலம் அரசு உடனடியாகத் தவறைச் சரி செய்துவிட்டது. ஆனால் யாரும் அரசின் நடவடிக்கையைப் பாராட்டவில்லை" என்ற பாலு, குஜராத் தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த விசயத்தை பாஜக ஊதுகிறது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சில செய்திகள் கூறுவதைப் பற்றிக் கேட்டதற்கு, ஆதம்பாலம் பகுதியில் இருந்த தூர்வாரும் இயந்திரங்கள் பாக் நீரிணைப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அங்கு வழக்கம்போல பணிகள் தொடர்கின்றன என்றார்.
"இந்த விசயம் உச்சநீதி மன்றத்தில் இருக்கும் போது நான் கருத்துக் கூற விரும்பவில்லை. நமது வாதங்களை நாம் நீதிமன்றத்தின் முன்பு வைப்போம். எல்லா அறிவியல் தகவல்களையும் நாம் எடுத்துச் சொல்வோம்" என்று அவர் தெரிவித்தார்.