திருச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த 1000 கி.கி. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.
திருச்சியின் புறநகர்ப்பகுதியான துவாக்குடிமலைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் வாச்சானி தலைமையில் தமிழக காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவு அதிரடி நடவடிக்கை நடத்தியது.
அங்குள்ள குடோனில் 18 சாக்குப்பைகளில் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ஜெலட்டின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கிடங்கின் பொறுப்பாளராக உள்ள நாகராஜ் (45) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூரில் இருந்து இந்த வெடிபொருட்கள் வாங்கி வரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாகராஜிடம் நடத்திய விசாரணையை அடுத்து மேலும் சில இடங்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் மேற்கொண்டு எதுவும் கிடைக்கவில்லை.