சாதாரண பொது மக்களுக்கு பயன்படுகின்ற ஒரு கருவியாக வங்கிகள் இருக்க வேண்டும் இந்தியன் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
இந்தியன் வங்கியின் 100-வது ஆண்டு நிறைவு விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் கருணாநிதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, வங்கிகள் வளர்ந்தால் மாத்திரம் போதாது. நம்முடைய நிதி அமைச்சர் இங்கே அழகாகச் சொன்னதைப் போல், மக்களுக்கு எல்லா வகையிலும் வங்கியின் கரங்கள் நீண்டு பயன்பட வேண்டும். அப்படி பயன்படுகின்ற விதத்திலே வங்கிகள் நடத்தப்பட வேண்டும். வங்கிகளில் நிர்வாகம் புரிபவர்கள் ஆனாலும், பணியாற்றுகிறவர்கள் ஆனாலும், அத்தனைபேரும் வங்கியின் முன்னேற்றம் ஒன்றையே தங்களுடைய தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் வங்கியின் நோக்கம் நிறைவேறும் என்றார்.
அப்படி நிறைவேறுகின்ற வகையிலே இந்த வங்கியின் பணிகளை மேலும் மேலும் ஊக்கப்படுத்துகின்ற, உயர்வுபடுத்துகின்ற வகையிலே அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வங்கிகள் ஏழை எளியவர்களுக்கு, சாதாரண சாமான்ய மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு பயன்படுகின்ற ஒரு கருவியாக வங்கிகளை ஆக்கிக் கொள்ள வேண்டும். அந்த வகையிலே இந்திய நாட்டில் அந்த வங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன, அப்படி பயன்படுகின்ற அளவிற்கு நம்முடைய நிதி மந்திரி போன்றவர்களுடைய ஆற்றலும், அறிவும் செயல்படுத்தப்படுகிறது என்பதை நான் அறியாமல் இல்லை. அவர்களுக்கெல்லாம் நான் என்னுடைய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன் என்று கருணாநிதி பேசினார்.