டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : செங்கோடன் வலியுறுத்தல்

Webdunia

திங்கள், 30 ஜூலை 2007 (18:42 IST)
மத்திய அரசு விரைவில் டீசல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தவேண்டும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.செங்கோடன் வலியுறுத்தியுள்ளார்.

சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 32 வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்டு பேசிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.செங்கோடன், தமிழ்நாட்டில் லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், லாரி உரிமையாளர்கள் தமிழக அரசிடம் எவ்வித கோரிக்கையும் இதுவரை வைத்ததில்லை என்றும், ஆனால் தற்போது வைக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

விரைவில் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார் . டீசல் விலை உயர்ந்தால் 80 சதவீதம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்