நதிகள் இணைப்பு சாத்தியமே என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிவடைந்து சென்னை திரும்பி அப்துல் கலாம் சென்னை அண்ணா பலகலைக் கழகத்தில் ஆசிரியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார். நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாக தேவைப்படும் புதிய ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அணு சக்தி, சூரிய விசை, எய்ட்ஸ் நோய் தடுப்பு, வானிலை உள்ளிட்ட அம்சங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்நிகழச்சிக்கு அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாகளிடம் பேசிய அவர், நாட்டில் உள்ள மிகப் பெரிய நதிகளான பிரம்மபுத்திரா, கோதாவரி, கங்கை, காவிரி, ஆகிய நதிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன. சில நேரங்களில் காவிரி நதியில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது என்றார்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தாமிரபரணியுடன் இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கலாம், இதன் மூலம் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும் என்று கூறினார்.
ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அதன் பின்னர் கங்கை, காவிரி, கிருஷ்ணா என்று தேசிய அளவில் நதிகளை ஒருங்கிணைக்கலாம் என்று யோசனை தெரிவித்த அப்துல் கலாம், இது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.