குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல் கலாம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று முதல் ஆசிரியர் பணியை தொடங்குகிறார்.
ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவர் பதவி வகித்த அப்துல் கலாம், தனது பதவிக் காலம் முடிந்து நேற்று இரவு சென்னை திரும்பினார். இந்திய விமானப் படை மூலம் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக நிதியமைச்சர் அன்பழகன், பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன், தமிழக காவல் துறைத் தலைவர் டி.முகர்ஜி முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலாமை வரவேற்னர். இதனைத் தொடர்ந்து அவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டி.விஸ்வநாதன், பதிவாளர் கே.ஜெயராமன் ஆகியோர் அவரை வரவேற்னர். இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற உள்ள உரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலாம் கலந்துரையாடுகிறார்.
தமிழகத்தில் பிறந்து, படித்து, வளர்ந்த தான் மீண்டும் தமிழகத்தில் ஆசிரியர் பணியை மேற்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று அப்துல் கலாம் தெரிவித்தார்.