பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியில் கலந்து டெல்டா பாசத்திற்கு செல்கிறது.
அதே சமயம் பவானிசாகர் அணையில் இருந்து தொடங்கி ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாசனம் பெறச்செய்யும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையின்படி இன்று முதல் பதினைந்து நாட்கள் கீழ்பவானி வாய்க்காலில் உயிர்தண்ணீர் விடப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் இன்று நன்பகல் 12 மணிக்கு பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.சுப்பிரமணியம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டார்.
முதலில் வினாடிக்கு 500 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீர் படிப்படியாக வினாடிக்கு 2300 கனஅடிவரை நீட்டிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர் பழனிசாமி, உதவி பொறியாளர் ராஜூ ஆகியோர் தெரிவித்தனர்.