தமிழக அரசே கேபிள் டிவியை நடத்த முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசே கேபிள் டிவி நடத்தும் யோசனையை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்ததாகவும், இது குறித்து தாமும் ஆலோசித்ததாகவும் அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இத்திட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து மருத்துவர் ராமதாசுடன் அதிகாரிகளை அனுப்பி ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சட்டப் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்த பிறகு, அரசு தனியாக கேபிள் டிவி நடத்த முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களின் கேபிள் டி.வி. இணைப்புகளை அரசு கையகப்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ள அவர், டாஸ்மார்க் நிறுவனம் போல் கேபிள் டிவி மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் ஆண்டிற்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடங்கி முடிவடை குறிப்பிட்ட கால நிர்ணயம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக மாநிலம் முழுவதிலும் தொடங்கும் திட்டம் இல்லை என்றும், படிப்படியாக இது விரிவு படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.