மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களில் வெள்ள அபாயம்

Webdunia

சனி, 21 ஜூலை 2007 (13:58 IST)
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலைக்குள் அணையின் முழு கொள்ளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அணையின் முழு கொள்ளவான 120 அடியை அணை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தும், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வரத்து இருந்தால் தண்ணீரை அணையில் தேக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, அணைக்கு வரும் நீர் முழுவதையும் திறந்து விடும் நிலை உருவாகும். இதனால் திருச்சி, சேலம், ஈரோடு, கரூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்