சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் நன்கொடை பெறுவதை தடுக்கும் வகையில் அடுத்தாண்டு அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்கான பணியில் அரசு ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்காத வகையில், அவற்றை கண்காணிக்க இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், முன்னாள் நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு மாணவர்களின் கட்டணம் தொடர்பான புகார்களை விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகளை எதிர்த்த சுய நிதிக் கல்லூரிகள் நீதி மன்றங்களுக்குச் சென்று வழக்காடி வருவதையும், அதிலே அரசுக்கு எதிராகவே தீர்ப்புகள் வருவதையும், அதை எதிர்த்து அரசு மேல் முறையீடுகள் செய்து வருவதையும் நாட்டு மக்களும் மாணவர்களும் நன்றாகவே அறிவார்கள் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சுயநிதிக் கல்லூரிகளை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு கல்லூரிகளின் அதிபர்கள் மூலம் லாபம் ஈட்டிக் கொண்டு இருக்கிற அரசு, இந்த அரசு அல்ல என்பதை அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அதிக அளவிற்கு நன்கொடை பெறுவதைத் தடுக்கும் முயற்சியாகத்தான் அடுத்த ஆண்டு அரசு சார்பிலேயே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.