தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.'
சென்னை தீவுத் திடலில் தமிழக அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இதைபோக்கும் வகையில், புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதன் மூலம் அரசு ஊழியர்கள் ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இதற்கான காப்பீட்டுத் தொகையில் பெரும் தொகையை அரசு அளிக்கும் என்று தெரிவித்த அவர், சிறிய தொகை ஊழியர்களின் பங்களிப்பாக பெற்று திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.