என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Webdunia

திங்கள், 16 ஜூலை 2007 (11:30 IST)
நெய்வேலியில் இயங்கி வரும் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி.யில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் போன°, பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் வேலைநிறுத்தம் செய்வதென முடிவெடுத்தனர்.

இதற்கிடையே சென்னையில் உதவி தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் குப்புசாமி தெரிவித்தார். அதன்படி இன்று காலை வேலை நிறுத்தம் தொடங்கியது. ஒப்பந்த பணியாளர்கள் அலுவலக நுழைவுவாயில் முன் திரண்டுள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் சுரங்கபணி, நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளில் தொய்வு ஏற்படும். இதனால் மின் உற்பத்தி நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்