தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 65 விழுக்காடு இடங்களையும், சிறுபான்மையினர் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களையும் அரசு ஒதுக்கீட்டிற்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான நீதிமன்றக் குழு தீர்ப்பளித்துள்ளது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மாணாக்கர் சேர்க்கையை மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு செய்து தான் நிரப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
மாணாக்கர் சேர்க்கை விரைவில் துவங்க உள்ளதால் கடந்தாண்டு செய்ததைப் போலவே மாணாக்கர் சேர்க்கை செய்து கொள்ளாம் என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் விடுதலை கூறியுள்ளார்.