மேட்டூர் அணை ஜுலை 25ஆம் தேதி திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு

Webdunia

புதன், 11 ஜூலை 2007 (11:45 IST)
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி துவங்கியுள்ள நிலையில் மேட்டூர் அணையில் வரும் 25 ஆம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்தாண்டு அந்த தேதியில் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் அணை திறக்கப்பட வில்லை.

கடந்த 2 வாரங்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர் மட்டம் முழு அளவில் உயர்ந்து விட்ட நிலையில் கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 50 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்தும் நொடிக்கு சராசரியாக 30,0000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

எனவே குறுவை சாகுபடிக்காக வரும் 25 ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் முழு நீர் மட்டம் 124 அடியாகும். 120 அடி வரை நீரை தேக்க முடியும். மொத்த கொள்ளளவு 94 டிஎம்சி. ஒவ்வொரு நாளும் நொடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே காவிரியின் கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் கிட்டும்.அதாவது நாள் ஒன்றுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்