தமிழகத்தில் 3 நக்சலைட்டுகளை சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர் கைது செய்திருப்பதாக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் நாஞ்சில் பி.குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நக்சலைட்டுகளை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை பகுதியில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து, நேற்று இரவு திருப்பூரில் நக்சலைட்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் சுந்தரமூர்த்தி என்பவன் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவன் என்றும், நக்சலைட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவன் என்றும் அவர் கூறினார்.