போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இல்லாததைக் காரணம் காட்டி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தேனி, கன்னியாகுமரி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கழகம் மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தேனி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கல்லூரிகளுக்கு பிற மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளிலிருந்து ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தற்காலிகமாக இடம் மாற்றியது அதிமுக அரசு. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கேப் போய் விட்டனர்.
இதனால் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய மருத்துவக் கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதனால் மூன்று கல்லூரிகளிலும் உள்ள 300 இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை எதிர்த்து நாளை மூன்று மருத்துவக் கல்லூரிகள் முன்பும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
மூன்று மருத்துவக் கல்லூரிகள் குறித்தும் அவருடன் விவாதித்த ராமச்சந்திரன் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தற்போது 3 மருத்துவக் கல்லூரிகளிலும் மீண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என இந்திய மருத்துவக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர், தேனி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளில் திட்டமிட்டபடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அஇஅதிமுக நாளை நடத்தவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.