மகளிர் திட்டங்களில் தமிழகம் முன்னோடி - அமைச்சர் பூங்கோதை

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (18:41 IST)
மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பில், குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 தொடர்பான பட்டறை நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்டு, தமிழக சமூக நலத் துறை அமைச்சர் பூங்கோதை பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, திருமண உதவி திட்டம், மகப்பேறு நிதி,ம உதவித் தொகை போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

பெண் சிசுக்கு பாதுகாப்பு தர வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். இது போன்ற பயிற்சி பட்டறைகளில் ஆண்களும் கலந்து கொள்ள வேண்டும். குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதை மனித நேயத்துடன் பார்த்து தீர்வு காண வேண்டும். ராமாயண காலத்தில் இருந்தே குடும்ப வன்முறை தொடங்கிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். இந்நிலை மாற அரசு எடுக்கும் நிலைக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பூங்கோதை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்