கரும்புக்கு நஷ்ட ஈடு கோரி சிறை நிரப்பும் போராட்டம்!

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (15:01 IST)
கரும்புக்கு நஷ்ட ஈடு வழங்காவிட்டால் விவசாயிகள் சங்கம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரை மாணிக்கம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு டன் கரும்புக்கு அரசு 1,100 ரூபாய் விலை நிர்ணயித்து உள்ளது. பதிவு செய்யாத கரும்புகளை அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.150க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றன.

திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கரும்புகள் காய்ந்து விறகாகிவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இதை வலியுறத்தி ஜூலை 2 வது வாரத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

மத்திய அரசு தேங்காய்க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி இம்மாதம் இறுதி வாரத்தில் தஞ்சையில் சிறப்பு மாநாட்டினை நடத்த உள்ளோம். கூட்டுறவு சங்கத் தேர்தலை அரசு, ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பண்ணை சார்ந்த கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும் என்று துரைமாணிக்கம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்