காவலரைக் கொலை செய்த வழக்கில் ஒருவருக்குத் தூக்கு தண்டனையும், 4 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்துச் சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பரமநந்தம், சிதம்பர நகரக் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இவரை கடந்த 1999ஆம் ஆண்டில் காணவில்லை என்று இவரது மனைவி புகார் கொடுத்தார். இது குறித்து விசாரித்த காவல்துறையினர், கார் ஓட்டுநர் விஜயன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பரமநந்தன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இக்கொலையில் தொடர்புடைய செல்வம் (35), வீரா (எ) வீரமணி(34) மற்றும் அருள் அவரின் தந்தை கலியப்பெருமாள், தாய் மாரியம்மாள் இரமேசு, குருநாதன், விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தக் கொலை வழக்குச் சிதம்பரம் விரைவு நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி, செல்வத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.