மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்!
கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் கடந்த 26 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து முன்னணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 31,115 வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றிருந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூவை தோற்கடித்தார்.
மதுரை மேற்கு மொத்த வாக்குகள் : 1,56,000 பதிவான வாக்குகள் : 1,17,895
வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன், இந்த வெற்றி மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. அரசின் ஓராண்டுக்கால சாதனையின் மீது மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு என்று கூறியதாகவும், அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு தனக்கு வெற்றி அளித்துள்ளதாகவும் ராஜேந்திரன் கூறியுள்ளார்.