இந்தியாவில் மூன்றாவது அணி என்றுமே மூன்றாவது இடத்தில்தான் இருக்கும் என மத்திய அமைச்சர் வாசன் ஈரோட்டில் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க முடிவை, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எடுத்துள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு பெண்ணை இக்கூட்டணி அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காதது துரதிஷ்டவசமானது.
ஒரு பெண் குடியரசுத் தலைவராக வருவதை தடுக்க, முன்னாள் தமிழக முதல்வர் தவறான அணுகுமுறையை வெளிகாட்டியுள்ளார். இந்த போக்கை பெண்கள் உன்னிப்பாக கவனித்துள்ளனர். இனி வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு அ.தி.மு.க.,வுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எதிர்க்கட்சிகள் அவதூறாக பேசி வருவதை நிறுத்திக் கொள்வது நல்லது. குடியரசுத் தலைவராக போட்டியிடும் பிரதிபா பாட்டீல் வெற்றி பெறுவது உறுதி.மூன்றாவது அணியில் உள்ள தலைவர்கள் பின்னணி பற்றி கூற வேண்டுமென்றால், அவர்கள் அனைவரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்.
மூன்றாவது அணி மூன்றாவது இடத்தில் மட்டும் இருக்க முடியுமே தவிர, இரண்டாவது இடத்துக்கு கூட வர முடியாது.
மத்திய அரசின் திட்டங்கள் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறப்பான முறையில் அமல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ. 38 ஆயிரத்து 160 கோடி கொடுத்துள்ளது. இந்த பணம் எட்டு துறைகளில் 61 திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமான உறவை வைத்திருப்பதால், அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. பண வீக்கம் அதிகரித்து வருகிறது. அதனால்தான் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.