ஓராண்டில் 91,576 பேருக்கு நிலம்

Webdunia

வெள்ளி, 29 ஜூன் 2007 (09:48 IST)
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள ஏழை விவசாயிகள் 91,576 பேருக்கு இலவச தரிசு நிலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2006-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்குவோம் என்ற ஒரு வாக்குறுதியும் வழங்கப்பட்டது. அது நடைபெற்றும் வருகிறது.

ஆனால் ஒரு கிழமை ஏடு தனது கட்டுரை ஒன்றில் இரண்டு ரூபாய் அரிசி தொடங்கி இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வரை சொன்ன வாக்குறுதிகளை கில்லியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசால் இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தை மட்டும் சரியாக செயல்படுத்த முடியவில்லை என்று எழுதியுள்ளது. அந்த இதழாளர் தெரிந்து கொள்ள சில விவரங்கள் வருமாறு:-

ஐந்தாவது முறையாக 2006-ம் ஆண்டு மே திங்களில் தி.மு.க. பதவியேற்ற பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் பெரியார் பிறந்த நாளான 17.9.2006 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கி வைக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக 17.12.2006 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவிலும், மூன்றாவது கட்டமாக 17.3.2007 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலும் நடைபெற்ற விழாக்களில் கலந்து கொண்டு அரசு செலவிலே பண்படுத்தப்பட்ட நிலங்களை வழங்கினேன்.

அண்மையில் நான்காவது கட்டமாக திருநெல்வேலியில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் 17.6.2007 அன்று நானும், ஏனைய மாவட்டங்களில் மற்ற அமைச்சர்களும் கலந்து கொண்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பண்படுத்தப்பட்ட நிலங்களை வழங்கினோம்.

அந்த வகையில் இந்த நான்கு கட்டத்திலும் சேர்த்து தி.மு.க. அரசு 1,01,623 ஏக்கர் நிலத்தை, 91,576 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஓராண்டு காலத்தில் இலவசமாக வழங்கியுள்ளது என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்