மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கி 4 மணி நேரத்தில் 42 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாகவே நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பல வாக்குச்சாவடிகளில் காலை முதலே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மதுரையில் முகாமிட்டு இடைத் தேர்தல் வாக்குப்பதிவை கண்காணித்து வருகின்றார். இன்று மாலை 5 மணி வரை எவ்வித இடைவெளியும் இன்றி வாக்குப்பதிவு நடைபெறும்.
தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 216 வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் 100 அடி தூரம் வரை உள்ளூர் காவல் துறையினரும், மத்திய காவல்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு செய்ய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையைக் கண்பித்தே வாக்களிக்க வேண்டும். அல்லது தேர்தல் ஆணையம் கூறியுள்ள 10 ஆவணங்களை காண்பித்தும் வாக்களிக்கலாம்.