மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.பி.சண்முகம் மரணமடைந்தது தொடர்ந்து, அங்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் 23 சுயேட்சைகள் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து முதலமைச்சர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க வேட்பாளர் செல்லூர் ராஜீவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக் குமாரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும் தீவிர பிரசாரம் செய்தனர்.
கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று மாலை(ஞாயிற்றுக் கிழமை) 5.00 மணியுடன் முடிவடைந்தது. எல்லைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை(செவ்வாய் கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கி 5.00 மணிக்கு முடிவடைகிறது. வாக்குப் பதிவுக்கு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குச் சாவடிகளில் துணை இராணுவத்தினரும் காவல் துறையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்தியத் தேர்தல் பார்வையாளர்கள் அஜய்தியாகி, கணேஷ் ராம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொகுதி முழுவதும் சுற்றி பார்வையிட்டு வருகின்றனர்.