தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டத்தை பசுமையாக வைத்திருக்கும் இந்த அணையே ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது. நீண்ட வருடங்களாக நிரம்பாமல் இருந்த இந்த அணை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நிரம்பியது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் செழிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது. அதே சமயம் அணையில் இருந்து விவசாயத்திற்காக கீழ்பவானி வாய்க்கால் மூலமும், பவானி ஆற்றின் மூலமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி சென்றது.
அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடியை கழித்தால் மீதம் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். இதில் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 634 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. நேற்று மாலை 1,800 கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 73.13 அடியாக இருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 14,130 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு அணையின் சராசரி தண்ணீர் வரத்து விநாடிக்கு 8,629 கன அடி ஆக இருந்தது. அணையின் நீர்மட்டம் 75.15 ஆக உயர்ந்துள்ளது. ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
பவானி நதி உருவாகும் நீலகிரி மலைப் பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்ததால் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.