திருமண மோசடி புகார்: கிரகலட்சுமிக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Webdunia

புதன், 20 ஜூன் 2007 (17:23 IST)
கிரகலட்சுமிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தினமும் காலை தி.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அந்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், தன்னை ஏமாற்றி 2 வது திருமணம் செய்து கொண்டார் என்றும் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு கிரகலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்று பிரசாந்த் தரப்பில் எதிர்ப்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இவ்விரு மனுக்களும் நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கிரகலட்சுமிக்கு முன் ஜாமீன் வழங்க பிரசாந்த் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு, அரசு தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, கிரகலட்சுமிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தினமும் காலை தி.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்